"3 பிஎச்கே" படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன் - சித்தார்த்

சித்தார்த், சரத்குமார் நடித்துள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளாறார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 3 பிஎச்கே' படம் குறித்து பேசிய சித்தார்த், "இயக்குநர் ஸ்ரீ கணேஷ் '3 பிஎச்கே' படத்தின் கதையை சொன்னபோது மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தின் அறிமுக வீடியோவிலேயே வீட்டை ஒரு கதாபாத்திரம்போல் காட்சிப்படுத்தியிருப்பார். வீடு என்பது பலரின் கனவு. வாடகை வீட்டில் இருந்தாலே பல கேள்விகள் வரும். அப்படி, ஒரு குடும்பம் சொந்தவீடு கனவை நோக்கிச் செல்வதே இப்படம். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் நான் சொந்த வீடு வாங்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.






