

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் மகுடம் படம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, "'மகுடம்' திரைப்படத்தை நான் இயக்குவதாக ஆரம்பத்தில் திட்டமிடப்படவில்லை. ஒருவித எதிர்மறைச் சூழல் ஏற்பட்டதால், அதை நான் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதன்பிறகு நானே பொறுப்பேற்று, படத்தின் திரைக்கதையை முழுவதுமாக மாற்றியமைத்தேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "திரைக்கதையில் மாற்றங்கள் செய்திருந்தாலும், கதைக்கான அங்கீகாரத்தை ரவியரசுக்கே வழங்கியுள்ளேன். அதற்கான ஊதியத்தையும் அவருக்கு அளித்துள்ளேன்" என்று விஷால் கூறினார்.
தொடர்ந்து பேசிய விஷால், "'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அறிமுகமாகும் 45-வது அறிமுக இயக்குநர் நான்தான். இது எனது மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் மிகத் துல்லியமாக செதுக்கி வருகிறேன். ஆனால், எனது இரண்டாவது படமும் இதேபோல் சிறப்பாக அமையும் என்று இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.