"நான் எதிர்பாக்கல.. இப்படி பண்ணிட்டாங்க" அழுது வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி

'ஜனநாயகன்' படத்தில் தனது காட்சிகள் முழுமையாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக கண்ணீர் மல்க நடிகை ஆனந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"நான் எதிர்பாக்கல.. இப்படி பண்ணிட்டாங்க" அழுது வீடியோ வெளியிட்ட  நடிகை ஆனந்தி
Published on

சென்னை,

தமிழக திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவான 'ஜனநாயகன்', எச். வினோத் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ரேவதி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், வெளியான முதல் நாளிலேயே திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைகட்டியது.

காட்சிகள் நீக்கப்பட்டதால் வருத்தம்

இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தில் நடித்திருந்த நடிகை ஆனந்தி, படத்தில் தனது காட்சிகள் முழுமையாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"எதிர்பார்க்கவே இல்லை"

அந்த வீடியோவில் பேசிய ஆனந்தி, "நான் நடித்த பல படங்களில் சில காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்காக நான் பெரிதாக வருத்தப்பட்டதில்லை. 'ஜனநாயகன்' படத்தில் என் காட்சிகள் நீக்கப்பட்டது மட்டும் மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்தப் படம் வெளியாக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தேன். என் காட்சிகளை திரையில் பார்க்கும் ஆவலோடு சந்தோஷமாக தியேட்டருக்கு சென்றேன். ஆனால் அவை எடிட் செய்யப்பட்டிருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

"விஜய்யுடன் நடிப்பது என் கனவு"

மேலும், "விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அவர் மீண்டும் நடித்தால் முயற்சி செய்யலாம். ஆனால் இதுதான் அவரது கடைசி திரைப்படம். அதனால் இந்த வாய்ப்பு தவறிவிட்டதே என்ற வருத்தம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்தை பேசும் நல்ல திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் சென்று படத்தை பாருங்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்தடுத்து எடிட்டிங்கில் நீக்கப்படும் காட்சிகள்

ஆனந்தி நடித்த '29', சூர்யாவின் 'கருப்பு', தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்' என அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் அவரது காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து இப்படியான அனுபவம் ஏற்பட்டிருப்பது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், தன்னை "அதிர்ஷ்டமில்லாதவள்" போல் உணர்வதாகவும் ஆனந்தி தனது வீடியோவில் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com