

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'ரூஹி', 'குட் லக் ஜெர்ரி', 'மிலி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் 'பெத்தி' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூர் தனது மது பழக்கம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என்றோ அல்லது அதை தவறாக பயன்படுத்தினேன் என்றோ சொல்ல மாட்டேன். எப்போதாவது குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. என் வாழ்வில் மிகவும் வேதனையான ஒரு அனுபவத்திற்கு பிறகு இது நடந்தது. எனக்கு ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றியது. காலையில் நான் எழுந்திருக்கும் போது வரும் அந்த தலைவலி எனக்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தும். என்னிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட வாசனையை என்னால் நுகர முடிந்தது. என் வாழ்வில் குடிப்பழக்கத்தால் அவதிப்பட்ட ஒருவரிடம் இருந்து எனக்கு வந்த அதே பரிச்சயமான வாசனை. அந்த வாசனை இது ஒரு நல்ல நாள் இல்லை என்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தும்."
இவ்வாறு அவர் கூறினார்.