வாசனை மற்றும் சுவை அறியும் திறனை இழந்தேன்: உடல் நலம் குறித்து மம்முட்டி உருக்கம்

ஒரு விஷயத்தை நாம் இழக்கும்போதுதான் அதன் மதிப்பை உணர்கிறோம் என்று நடிகர் மம்முட்டி உருக்கமாக பேசியுள்ளார்.

வாசனை மற்றும் சுவை அறியும் திறனை  இழந்தேன்: உடல் நலம் குறித்து மம்முட்டி உருக்கம்
Published on

கொச்சி,

மலையாள திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் மம்மூட்டி. 74 வயது ஆகும் மம்மூட்டி, இப்போதும் இளமை மாறாமல் தற்போதுள்ள ஹீரோக்களுக்கு போட்டி கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உடல்நலத்துக்கான சிகிச்சைகள் எடுத்து, தற்போது மீண்டு படங்களில் பிஸியாகியுள்ளார். அண்மையில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மம்மூட்டி, தனது உடல்நலம் பற்றி பேசியுள்ளார்.

மம்மூட்டி அதில் பேசியதாவது: கண் பார்வையும் செவித்திறனும் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சங்கள். இசை உட்பட நாம் கேட்கும் அனைத்தையும், செவித்திறன் சவால் கொண்டவர்களுக்கு கேட்கச் செய்வது நல்ல விஷயம். எனக்கு அப்படியான சிலரைத் தெரியும். ஷூட்டிங் நேரத்தில் செவித்திறன் சவால் கொண்ட ஒருவருக்கு, நான் கருவி ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அதை மாட்டிய அந்த நபர் உடனே கழற்றிவிட்டார். சத்தங்கள் என்பது அவருக்கு புதிது. அதில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. அதன் தேவையும் அவருக்கு ஏற்படவில்லை. எனவே, அதன்பின் அந்தக் கருவியை அவர் பயன்படுத்தவே இல்லை. இதுபோல பலர் இருக்கலாம். ஆனால், நமக்குச் சில விஷயங்கள் இல்லாமல் இருக்கும் போதுதான் அதன் மதிப்பு தெரியும்.

கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாமல்கூட இருக்கும். எனக்கு நீண்டகாலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் நுகர முடியவில்லை. இப்போதுதான் அது மெதுவாகத் திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும்போதுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்,” என்று உருக்கமாகப் பேசினார்.

மம்மூட்டி தற்போது இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பாட்ரியாட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லால், பஹத் பாசில், நயன் தாரா, ராஜீவ் மேனன், ரேவதி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com