ஷைன் டாம் சாக்கோவின் செயல்பாடுகளை நண்பனாக பலமுறை நான் கண்டித்திருக்கிறேன் - ஆசிப் அலி

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்தும் அவரது தந்தை உயிரிழப்பு குறித்தும் வெளிப்படையாக நடிகர் ஆசிப் அலி பேசியிருக்கிறார்.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது.
ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தோடு காரில் பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது தந்தை சி.பி சாக்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோ, தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை எடுத்துவிட்டு, இப்போது கேரளாவிலுள்ள திருச்சூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஷைன் டாம் சாக்கோவை மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இன்று ஷைன் டாம் சாக்கோவின் தந்தை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திரையுலகினர் பலரும் ஷைன் டாம் சாக்கோவிற்கும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'கிஷ்கிந்தா காண்டம்' படத்தின் நடிகரும், டாம் சாக்கோவின் நண்பருமான ஆசிப் அலி, "ஷைன் டாம் சாக்கோ குடும்பத்திற்கு நடந்த விபத்தும், அவரது தந்தையின் மரணமும் எங்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. டாம் சாக்கோவின் செயல்பாடுகளை நண்பனாக பலமுறை நான் கண்டித்திருக்கிறேன். அவர் மீது கோபப்பட்டிருக்கிறேன். அவருக்குப் பலமுறை அறிவுரையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது நாம் எல்லோரும் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.






