

மும்பை,
“சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதை ஒருமுறை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்சிங். தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான், இந்தியன்-2 உள்பட படங்களில் நடித்து உள்ளார். இவர் இந்திப்பட தயாரிப்பாளர் வாசு பக்னானின் மகன் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் மும்பையில் நடிகை ரகுல் பிரீத்சிங், அவரது மாமனார் வாசு பக்னானி மற்றும் அவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான பேனோரமா ஸ்டூடியோவுடன் தொடர்புடைய 12 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். திரைப்படங்களுக்கான முதலீடுகள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் சார்ந்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகி வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, நடிகை ரகுல் பிரீத் சிங் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சில ஆன்லைன் நிருபர்களும், முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த சிலரும் உண்மைகளை சரிபார்க்காமல் பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுவது மனவேதனை அளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதை ஒருமுறை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் ஆயுதப் படைகளின் பின்னணியைச் சேர்ந்தவர் என்றும், திரைத்துறையில் தனக்கு எந்தவிதமான பின்புலமும், காட்பாதரும் இல்லை. தனது கடின உழைப்பால் முன்னேறியதாகவும், பொறுப்புள்ள சட்டத்தை மதிக்கும் குடிமகனாக 20 வயது முதல் செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாகவோ சட்டவிரோத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதில்லை. மேலும், இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ யாருக்காகவும் பினாமி சொத்துகளை வைத்திருக்கவில்லை என்றும், யாரும் தனக்கு எந்தவொரு சொத்தையும் பரிசாக வழங்கியதில்லை. தன்னைப் பற்றி தவறான, தீய நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஊகச் செய்திகளை சம்பந்தப்பட்டவர்கள் வாபஸ் பெற்று, உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ரகுல் பிரீத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடக நிறுவனங்களுக்கு பல்வேறு வணிக அழுத்தங்கள் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்வதாகவும், ஆனால் அந்த அழுத்தம் உண்மைகளின் அடிப்படையிலான செய்திகளை பாதிக்கக்கூடாது என்றும், ஒருவரின் நற்பெயருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.