“அரசியல் பதவியில் எனக்கு எந்த ஆசையும் இல்லை” - லதா ரஜினிகாந்த் பேச்சு

லதா ரஜினிகாந்த்தின் அறிவிப்பு சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது தனது நோக்கம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“அரசியல் பதவியில் எனக்கு எந்த ஆசையும் இல்லை” -  லதா ரஜினிகாந்த் பேச்சு
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், அண்மையில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கத்தை அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது தனது நோக்கம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக வெளியிட்டிருந்த காணொளியில், “எங்களுடைய இயக்கத்தின் மூலம் இந்த மாநிலத்திற்காக பணியாற்ற விரும்பும் அனைவரும் எங்களுடன் இணையலாம். பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்துக்கு பல நன்மைகளைச் செய்ய வேண்டும். ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும். மக்களிடம் இருக்கும் சிந்தனைகள், வலிமை மற்றும் பங்களிப்புகளை மாநில வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்” என்று லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியதுடன், லதா ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க உள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்பியது.

“அரசியல் அல்ல, சமூக சேவையே நோக்கம்”

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய லதா ரஜினிகாந்த், அரசியல் பதவிகள் மீது தனக்கு எந்தவித விருப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அரசியல் பதவிகள் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. அரசியலை விட ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதே என் முக்கிய நோக்கம். முதலில் சமூக ரீதியாக மக்களுக்கு சேவை செய்ய தகுதியானவர்களாக நாம் மாற வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வதே தற்போதைய இலக்காக உள்ளது” என்றார்.

“நான் வழிகாட்டியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்”

மேலும் அவர் கூறுகையில், “இந்த இயக்கத்தின் எதிர்காலத்தை அடுத்த தலைமுறையினர் தீர்மானிக்கட்டும். அவர்களே இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும். நான் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ‘மக்கள் மேடை’ இயக்கத்தின் அடிப்படை நோக்கம்” என்று தெரிவித்துள்ளார். லதா ரஜினிகாந்தின் இந்த விளக்கம், அவரது புதிய மக்கள் இயக்கம் தொடர்பாக எழுந்த அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com