ரூ.634 கோடி ஊழலில் எனக்கு தொடர்பு இல்லை - நடிகை ஜனனி அசோக் விளக்கம்

ரூ.634 கோடி ஊழல் விவகாரத்தில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் பெயரும் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ரூ.634 கோடி ஊழலில் எனக்கு தொடர்பு இல்லை - நடிகை ஜனனி அசோக் விளக்கம்
Published on: 

ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என நடிகை ஜனனி அசோக் குமார் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த விவகாரத்தில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் பெயரும் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை ஜனனி அசோக் குமார் அறிக்கை

நடிகை ஜனனி அசோக் குமார் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “634 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் என்னை தொடர்புபடுத்தி சமூக வலைதள பக்கங்களில் வெளியான பதிவுகளை பார்த்தேன். அது தொடர்பாக விளக்கம் கொடுப்பது முக்கியம் என நினைக்கிறேன்.

எனக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறேன். நான் எந்த கட்சியிலும் இல்லை, எந்த அரசியல்வாதியுடன் தொடர்பிலும் இல்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. என்னுடைய வாழ்க்கைக்கு எதிரானவை. உண்மைக்கு எந்த முகாந்திரமும் இல்லாத இது போன்ற தகவல்கள் எப்படி வெளியாகி, ஊதி பெரிதாக்கப்படுகின்றன? சம்பந்தபட்டவர்களிடம் எதையும் கேட்காமல் அவர் பெயரும், ஆதராமும் இல்லாமல் எப்படி பரப்பப்படுகிறது என்பதை கேட்க விரும்புகிறேன்.

துல்லியமாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு பத்திரிகைத்துறைக்கு உண்டு. என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவது என்னை காயப்படுத்துகிறது. விசாரணைக்கு அழைப்பதாலேயே குற்றம் செய்ததாக அர்த்தமல்ல. திரைத்துறையில் கடினமாக உழைத்து எனக்கான கண்ணியமான இடத்தை உருவாக்கியுள்ளேன். ஒரு பெண் தனியாக ஆரம்பத்திலிருந்து கடினமாக உழைத்து, தன்னுடைய கரியரை உருவாக்கியிருந்தால், ஆன்லைனில் பரவும் அவதூறால் அதையெல்லாம் எளிதாக மறைத்துவிட முடிகிறது.

ஒருவர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல், அல்லது உண்மையை அறிந்துகொள்ளாமல், ஆன்லைனில் பரவும் தகவலை வைத்து ஒருவர் குறித்து எளிதாக முன்முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். என்னைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது பொய் என தெரியும். இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியதை நினைக்கும்போதே வருத்தமாக உள்ளது. யாருக்கும் என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தன்மை அறிந்து செய்திகளை நம்புங்கள்” என்றார்.

X