சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை - பிரபு அண்ணன்


சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை - பிரபு அண்ணன்
x
தினத்தந்தி 8 April 2025 6:37 PM IST (Updated: 8 April 2025 6:45 PM IST)
t-max-icont-min-icon

சிவாஜி கணேசனின் மூத்தமகன் நடிகர் ராம் குமார், அன்னை இல்லத்தின் மீது தனக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் ராம் குமாரின் மகனுமானவர் துஷ்யந்த். இவரும் அவருடைய மனைவி அபிராமியும் பங்குதாரராக உள்ள 'ஈசன் புரொடக்சன்' என்ற நிறுவனம், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பட உரிமைகளை வழங்காததால் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விடக்கோரி தனபாக்கியம் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதே சமயம் தனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என நடிகர் பிரபு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "அண்ணனின் ரூ.3 கோடி கடனை அடைத்துவிட்டு அந்த பணத்தை அண்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே" என பிரபு தரப்பிற்கு யோசனை தெரிவித்தார். இந்த வழக்கில் வாதிட்ட பிரபு தரப்பு, "அண்ணன் ராம்குமார் மகன் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருடைய கடனை நான் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். வாழ்நாளில் இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது கிடையாது. அன்னை இல்லத்தில் அண்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை" என்றது. இதனையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சிவாஜி வீட்டின் மீது உரிமை, பங்கு இல்லை எனவும் எதிர்காலத்திலும் உரிமைக்கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் மூத்தமகன் நடிகர் ராம் குமார், அன்னை இல்லத்தின் மீது தனக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வழக்கு வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story