இப்படித்தான் நடக்கும் என்று என் மகன் சூர்யாவிடம் சொல்லிவிட்டேன் - விஜய் சேதுபதி

‘பீனிக்ஸ்’ படத்தால் தன் மகன் விமர்சிக்கப்பட்டது குறித்து நடிகர் விஜய்சேதுபதி பேசியிருக்கிறார்
இப்படித்தான் நடக்கும் என்று என் மகன் சூர்யாவிடம் சொல்லிவிட்டேன் - விஜய் சேதுபதி
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள 'பீனிக்ஸ்'. இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (ஜூலை 4) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்நிகழ்வுக்கு நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தார். இதற்கு முன்னர் பீனிக்ஸ் திரைப்பட பிரஸ் மீட் நிகழ்வில், சூர்யா சேதுபதி வாயில் பப்பல்கம் மென்றுக்கொண்டே பேசியது, சில இடங்களில் தடாலடியாக பதிலளித்தது என இந்தத் திரைப்பட அறிவிப்பு வந்ததிலிருந்து அவர் பல்வேறு வகையில் விமர்சனத்துக்குள்ளானார். இந்த நிலையில், அவர் டிரோல் செய்யப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களுக்கு காபிரைட், ஸ்ட்ரைக் எனக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரமும் பேசுபொருளானது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. என் மகன் மட்டுமல்ல இந்தப் படத்தில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படக்குழு சிறப்பாக வேலை செய்திருக்கிறது. இந்தப் படம் வெளியாகுவதற்கு முன்பே ட்ரோல் செய்யப்பட்டது. இது பற்றி ஏற்கெனவே என் மகனிடம் பேசிவிட்டேன். இந்தத் துறைக்கு வரவேண்டுமென்றால், இப்படித்தான் முதலில் நடக்கும் அதை அப்படியே கடந்துவிட வேண்டும் எனக் கூறிவிட்டேன். அதனால்தான் நான் அவரின் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. அவரே எல்லாவற்றையும் சமாளித்தார். என் மகன் உள்ளிட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காபிரைட் போன்ற பிரச்சனைகள் எங்களிலிருந்து யாராவது ஒருவர் செய்திருப்பார். அதற்காக, என் மகன் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கு நன்றி" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com