

தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்து கொண்டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகர் ஜான் கொக்கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற மீரா வாசுதேவன், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார்.
இவரையும் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தார். மூன்று முறை திருமணம் செய்த போது அவரது மணவாழ்க்கை அவருக்கு கசப்பான அனுபவங்களையே கொடுத்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் மீரா வாசுதேவன். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் என் மகனிடம் அடிக்கடி சொல்வேன்... மூன்று முட்டாள்தனமான திருமணங்களுக்காக என் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன். அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக வேலை செய்திருந்தால் நான் இன்னும் பல சாதனைகள் செய்திருக்கலாம். சினிமா, உடற்பயிற்சி அல்லது எனக்காக ஒரு சிறந்த சமூக வட்டத்தை உருவாக்குவது போன்ற நான் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்,” என்று கூறியுள்ளார்.