''அதனால்தான் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன், இல்லையென்றால்...'' - தனுஷ்

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ''குபேரா'' படம் வருகிற 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ் தனக்கு நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்..
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ''குபேரா'' படம் வருகிற 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், ''குபேரா'' படத்தின் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவில் தனுஷ் பேசுகையில், "எனக்கு நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் பிடிக்கும். ரசிகர்கள் என் படங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், அதனால்தான் நான் நடிகராக இருக்கிறேன். இல்லையென்றால் நான் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர இயக்குனராக மாறியிருப்பேன்'' என்றார்.
நடிகர் தனுஷ் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ''ப பாண்டி'' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ''ராயன்'' படத்தையும் சமீபத்தில் வெளியான ''நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'' படத்தையும் இயக்கி இருந்தார். 4-வதாக தனுஷ் ''இட்லி கடை'' படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது.






