பட வாய்ப்புகளை இழந்தேன்.. சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் - நடிகர் முகேன் ராவ்

தயாரிப்பாளர் ஒருவர் தொடர்பான பண மோசடி புகாரில் நடிகர் முகேன் ராவின் பெயரும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
பட வாய்ப்புகளை இழந்தேன்.. சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் - நடிகர் முகேன் ராவ்
Published on: 

சென்னை,

இதுவரை இந்தப் பிரச்சினையை தொழில்முறை முறையில் கையாள வேண்டும் என்பதால் அமைதியாக இருந்தேன். இனிமேல் உரிய சட்ட நடைமுறைகளின்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்ள இருக்கிறேன். என நடிகர் முகேன் ராவ் பதிவிட்டுள்ளார்.

நடிகர் முகேன் ராவ்

2019-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முகேன் ராவ். மலேசியாவைச் சேர்ந்த இவர், 'வேலன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 'காலங்களில் அவள் வசந்தம்', 'மைத்ரீ', 'ஜின் - தி பெட்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரீத்தி அஸ்ரானியுடன் இணைந்து 'நிறம்' என்ற மருத்துவக் குற்றப் பின்னணியிலான திரில்லர் படத்திலும், 'மைலோ' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

பண மோசடி புகார் குறித்து விளக்கம்

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் தொடர்பான பண மோசடி புகாரில் நடிகர் முகேன் ராவின் பெயரும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் முன்பணம் பெற்றிருந்தேன். அந்தப் படம் தொடங்கும் என்ற நம்பிக்கையில் சுமார் 8 முதல் 10 மாதங்கள், ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்தேன். இதனால் மற்ற இரண்டு படங்களில் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புகளையும் இழந்தேன். இறுதியில் தயாரிப்பாளர் அந்தத் திரைப்படத்தை கைவிட முடிவு செய்தார். இருப்பினும், நான் முன்பணமாகப் பெற்ற முழுத் தொகையையும் திருப்பிக் கொடுக்க முன்வந்து திருப்பி அளித்துவிட்டேன். இந்த விவகாரத்தில் எனது கடமைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

இதுவரை இந்தப் பிரச்சினையை தொழில்முறை முறையில் கையாள வேண்டும் என்பதால் அமைதியாக இருந்தேன். இனிமேல் உரிய சட்ட நடைமுறைகளின்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்ள இருக்கிறேன். இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்கவோ, கூடுதல் விவரங்களை வெளியிடவோ விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு

மேலும், தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள முகேன் ராவ், இந்த விவகாரத்தில் சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

X