

சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது.
இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், ‘நூறு சாமி’ பட விழாவில் விஜய் ஆண்டனி இப்படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "'பிச்சைக்காரன்' படத்தை முடித்த பிறகு, அதற்கு இணையான அல்லது அதை மிஞ்சக்கூடிய ஒரு கதையை வேறு யாராவது எப்படி உருவாக்க முடியும் என்றே நான் வியந்துகொண்டிருந்தேன். அது என் திரைப்பயணத்திலேயே மிகச்சிறந்த படமாக அமைந்திருந்தது. ஆனால் இப்போது, ஐயா அவர்கள் 'பிச்சைக்காரன்' படத்தையும் மிஞ்சக்கூடிய வகையில் ஒரு கதையை எழுதியிருக்கிறார்.
இது ஒரு அற்புதமான கதை. தாய் பாசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோலவே மிக முக்கியமான வேறொரு உணர்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கதையில் சஸ்பென்ஸ் கலந்திருப்பதால், என்னால் இதைப்பற்றி இதற்கு மேல் விரிவாகக் கூற இயலாது." என்று தெரிவித்துள்ளார்.