அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை - அர்ஜுன் தாஸ்

அனைவரும் 'குட் பேட் அக்லி' படத்தைப் பார்த்து ஒரு முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் படம் இன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தளத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் அவருடன் பணி புரிந்தது குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில், "இன்னும் சில மணிநேரங்கள் தான் இருக்கிறது. எனக்கு பதட்டமாக, உற்சாகமாக, ஆர்வமாக இருக்கிறது. நான் அஜித் சாரின் படங்களுக்கு மார்கெட்டிங் மற்றும் புரமோஷன் செய்தபோது, அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால், பல வருடங்களுக்கு பின்னர் அது நடந்துள்ளது.
இரவு முழுக்க விழித்திருந்து அதிகாலையில தியேட்டரில் முதல் ஆளாக படத்தை பார்ப்பேன். ஆனால் இன்று அஜித் சாருடன் திரையைப் பகிர்ந்து நடித்துள்ளதை திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். அஜித் சாரின் ரசிகர்களுக்கும் - உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி. நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் குட் பேட் அக்லி படத்தைப் பார்த்து ஒரு முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆதிக் ரவிச்சந்திரன் சகோதரரே - என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. மேலும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள். சில மணி நேரத்தில் திரையரங்குகளில் சந்திப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.






