“எப்ஸ்டீன் கோப்பு” குறிப்பிட்டுள்ள இடத்திற்கு நான் சென்றதில்லை - அனுராக் காஷ்யப்

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எப்ஸ்டீன் கோப்பு” குறிப்பிட்டுள்ள  இடத்திற்கு நான் சென்றதில்லை - அனுராக் காஷ்யப்
Published on

அமெரிக்காவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், வழக்குகளின் விவரம் தொடர்பான நீதிமன்ற ஆவணம் வெளியானது. இந்த நீதிமன்ற ஆவணத்தில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ, பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்கு புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பதிலளித்து பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப், “இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும்.நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான்.அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன” என கூறியுள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘மகாராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது இயக்கம் மற்றும் திரைக்கதைக்கென 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com