

சென்னை,
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 2 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இன்று சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று காலை முதலே திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், விக்ரம், தனுஷ், ஜீவா, துருவ் விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் தங்களது வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தனது வாக்குப்பதிவினை செலுத்திய நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையாவது மக்கள் வெற்றி பெறட்டும். அடுத்த முறையாவது மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி தந்து,——— தந்து வாக்குக் கேட்பதாக இல்லாமல், மக்களிடம் பிரச்சனைகளே இல்லையே என்று செய்வது என அரசியல்வாதிகள் சிந்திக்கும் நல்நிலை உருவாக வேண்டும் என ‘மை’ போட்டு மந்திரம் செய்துவிட்டு வந்தேன்! என்று பதிவிட்டுள்ளார்.