கதை கேட்ட 5 நிமிடங்களில் சிரிக்கத் தொடங்கிவிட்டேன்! - ‘சீன்’ படம் குறித்து சூர்யா

துபாயில் நடைபெற்ற ‘சீன்’ திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.
கதை கேட்ட 5 நிமிடங்களில் சிரிக்கத் தொடங்கிவிட்டேன்! - ‘சீன்’ படம் குறித்து சூர்யா
Published on: 

துபாய்,

‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ படங்களைப் பார்த்த பிறகு இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

‘சீன்’ படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜகரம் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

அதிரடி, நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இன்பராஜ் பாண்டியன் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். குற்றவாளிகளைக் கையாள்வதில் அதிரடியான அணுகுமுறையைக் கொண்ட காவல் அதிகாரியாக அவர் நடித்திருப்பதாகப் படத்தின் முன்னோட்டம் தெரிவிக்கிறது.

கதை கேட்டபோதே சிரிப்பு!

துபாயில் நடைபெற்ற ‘சீன்’ திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஜித்து மாதவன் இயக்கிய ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களைப் பார்த்த பிறகு, அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பொதுவாக, கதைகளைக் கேட்கும்போது நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஆனால், இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது என்னால் அப்படி இருக்க முடியவில்லை. கதை கேட்கத் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்கத் தொடங்கிவிட்டேன். இந்தப் படத்தை நான் முழுமையாக ரசித்தேன். ‘சீன்’ படத்தின் மூலம் ஜித்து மாதவன் முற்றிலும் புதியதொரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார்.

நவம்பர் 6ல் ரிலீஸ்

வரும் நவம்பர் 6-ந்தேதி தீபாவளி வெளியீடாக ‘சீன்’ திரைப்படம் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com