4 வயதிலேயே என் மகனுக்கு பாலியல் பாதுகாப்பு, கருத்தடை வரை சொல்லிகொடுத்தேன் - நடிகர் மாதவன்

பிள்ளை வளர்ப்பு குறித்து நடிகர் மாதவன் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
4 வயதிலேயே என் மகனுக்கு பாலியல் பாதுகாப்பு, கருத்தடை வரை சொல்லிகொடுத்தேன் - நடிகர் மாதவன்
Published on

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். மாதவன் இந்தியில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுடன் நடித்துள்ளார். மாதவன் கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ராக்கெட்டரி’ படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.

மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மாதவன் நடித்துள்ள ‘லெஜஸி’ வெப்சீரிஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது.சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘துரந்தர் 2’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் மாதவன் தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், தனது மகன் வேதாந்த் மாதவனை வளர்த்த விதம் குறித்து சில சுவாரஸ்யமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

அவரின் பேட்டியில், “குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களை விபரங்கள் தெரியாமல் வளர்ப்பது அல்ல, மாறாக அவர்களுக்கு உலகத்தின் எதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பதே சிறந்தது. வேதாந்திற்கு மிகச்சிறு வயதிலிருந்தே ஒரு முதிர்ந்த நபரைப் போலவே மதிப்பளித்து வளர்த்தேன். குறிப்பாக, பெரும்பாலான பெற்றோர்கள் பேசத் தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல் , பாலியல் பாதுகாப்பு மற்றும் கருத்தடை போன்ற விஷயங்களைப் பற்றி, வேதாந்த் டீன்-ஏஜ் பருவத்தை எட்டுவதற்கு முன்பே, அதாவது அவரின் 4 வயதிலிருந்தே நான் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசி வருகிறேன். இது அவருக்கும் எனக்குமான நம்பிக்கையை அதிகரித்தது.

இந்த வெளிப்படையான அணுகுமுறை வேதாந்திற்கு என் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியதோடு, அவரை ஒரு பொறுப்புள்ள இளைஞராக மாற்றவும் உதவியுள்ளது.சினிமா நட்சத்திரத்தின் வாரிசாக இருப்பதால் ஏற்படும் தேவையற்ற செல்வாக்குகள், புகழின் இருண்ட பக்கங்கள் மற்றும் பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது போன்ற வாழ்வியல் பாடங்களையும் அவருக்கு முன்கூட்டியே கற்றுக்கொடுத்தேன். இதன் மூலம் வெளி உலக அழுத்தங்களை வேதாந்த் எளிதாகக் கையாள முடியும் எனக் கருதினேன்.

ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பிம்பம் வேதாந்தை ஒருபோதும் பாதித்ததில்லை. நான் பல ஆண்டுகள் உழைத்து இயக்கி, நடித்த 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படத்தைப் பார்த்த பிறகு, வேதாந்த் வெறும் "மோசமில்லை அப்பா" என்று மட்டுமே கூறினார். என் மகனை அவ்வளவு எளிதில் ஈர்க்க முடியாது. நான் நடித்ததில் வேதாந்திற்குப் பிடித்த திரைப்படம் 2009-ல் வெளியான ‘யாவரும் நலம்’ மட்டும்தான்.

திரையுலகில் இருக்கும் பல தந்தைகள் தங்கள் பிள்ளைகள் தங்களின் திரைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நான் இதில் முற்றிலும் மாறுபடுகிறேன். எனது மகன் என் நிழலில் வளராமல், தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதனால்தான் தற்போது சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்று வரும் வேதாந்த், நான் அவருக்குக் கொடுத்த அந்தச் சுதந்திரத்தையும், முதிர்ச்சியையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி வருகிறார்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com