'மார்கோ':'பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியேறினேன்' - பிரபல நடிகர்

நடிகர் கிரண் அப்பாவரம், ’மார்கோ’ படத்தை பார்க்க முடியாமல் தியேட்டரிலிருந்து பாதியிலேயே வெளியேறியதாக கூறி இருக்கிறார்.
சென்னை,
இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தபோதும் அதீத வன்முறை காட்சிகளால் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இது குறித்து உன்னி முகுந்தனிடம் கேட்டபோது, 'சமூகத்தில் இருக்கும் வன்முறையில் 10 சதவீதத்தை கூட மார்கோ காட்டவில்லை' என்று பதிலளித்தார். இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கிய காரணமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஓடிடியில் வெளியான நிலையில் அந்த ஒளிபரப்பு உரிமையும் ரத்து செய்யப்படுமோ என்கிற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவர்ம் , மார்கோ படத்தை பார்க்க முடியாமல் தியேட்டரிலிருந்து பாதியிலேயே வெளியேறியதாக கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில்,"நானும் என் மனைவியும் 'மார்கோ'படத்தை காண தியேட்டருக்கு சென்றோம். படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற வன்முறை காட்சிகளை எங்களால் காண முடியவில்லை. என் மனைவி மிகவும் அசவுகரியமாக உணர்ந்தார். இதனால் கிளைமாக்ஸுக்கு முன்பே, நாங்கள் தியேட்டரை விட்டு வெளியேறினோம்' என்றார்.






