

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் மூலம், சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ பதிவு செய்துள்ளது. ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பட குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா “கருப்பு படம் குறித்த முடிவு 30 முதல் 45 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டது. சமீபகாலமாக, இவ்வளவு விரைவாக நான் எந்தவொரு படத்தையும் தேர்வு செய்ததே இல்லை. அன்றைக்கு எல்லாமே சரியாக இருந்த மாதிரி இருந்துச்சு. இது முழுக்க, முழுக்க ஆர்.ஜே.பாலாஜியின் விஷன் தான். அவர் சொல்லும் போதே தியேட்டரில் வேற மாதிரி இருக்கும் என்று நம்பிக்கை இருந்துதது. நம்பிக்கை வைத்து தான் எல்லா படங்களையும் பண்றோம். படம் குறித்து முடிவு பண்ண முதல் நாளில் இருந்தே எல்லாமே சரியாப்போச்சு. அதற்கு முழு காரணம் டிரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபு. எல்லா முடிவுகளையும் சரியா எடுத்ததுக்கும் சரியாக எடுக்க வைத்த கருப்பசாமிக்கும் தான் நான் நன்றி சொல்லணும். இது ஆசைப்பட்டது. ஆனா எதிர்பார்க்காத பெரிய வெற்றி கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதேபோல், சமீபகாலத்தில் எனது படத்திற்கு இத்தகைய வரவேற்பு கிடைத்ததையும் நான் கண்டதில்லை. உலகம் முழுவதும் இதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.