

ஐதராபாத்,
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கடார்’ பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டநிலையில், தற்போது சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா அரசு வழங்கும் முக்கியமான திரைப்பட விருதுகளில் ஒன்றான ‘கடார்’ (Gaddar) விருதுகளுக்கான 2025ஆம் ஆண்டின் விருது பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு திரைப்படத் துறையில் சிறப்பாக சாதனை படைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘தி கேர்ள் பிரெண்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது ராஷ்மிகா மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய ராஷ்மிகா “ஒரு காலத்தில் என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன். இப்போது என் நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. மிக பெரிய பாதையை கடந்து வந்ததை போல உணருகிறேன். ‘தி கேர்ள் பிரெண்ட்’ மாதிரியான படத்துக்காக விருது கிடைத்துள்ளது மிக சிறப்பானது. ஏனெனில் அது போன்ற நிறைய படங்கள் வருவதை அது ஊக்குவிக்கும். இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி. நான் இங்கு மருமகளாய் வருவதற்கு முன் மகளாய் வந்தேன். அப்போது நிறைய அன்பு தந்தீர்கள். இப்போது ஒரு மருமகளாய் உங்கள் முன் நிற்கிறேன். பெருமையாய் இருக்கிறது, உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுள்ளவளாய் இருப்பேன்” என்றார்.