'புஷ்பா 2' படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் - ராஷ்மிகா மந்தனா

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.
'புஷ்பா 2' படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் - ராஷ்மிகா மந்தனா
Published on

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2' படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு 'புஷ்பா 2 தி ரூல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தில் மைம் கோபி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 5-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் படத்தின் முதல் பாடலான 'கிஸ்ஸிக்' பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் சம்பளம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராஷ்மிகா "என்னுடைய சம்பளம் பற்றி வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மை அல்ல. அது வெறும் வதந்தி" என்று கூறினார். மேலும் புஷ்பா 1 படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது போல புஷ்பா 2 படத்திற்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா? என்ற கேள்விக்கு "கிடைக்கும் என நம்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com