ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் போவேன் - அஜித்குமார்

பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் அஜித். திரையுலகில் உச்சத்தில் இருந்த போதிலும் கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார் அஜித். பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்று வருகிறார். பெல்ஜியமில் கடந்த வாரம் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது.
ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் 'அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்று இருந்தது. தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் அஜித் மற்றும் அவரது அணி கலக்கி வரும் நிலையில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற கார் ரேஸ் தொடர்பான புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜித்குமார் கூறியிருக்கிறார்.
தற்போது பிரான்சில் நடைபெற்ரு வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற படங்களில் அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.