

டாக்ஸிக் பட விழாவில் பேசிய நடிகர் யாஷ், தொழில் என்றாலும் சரி, உறவு என்றாலும் சரி நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கவேண்டும். அதை செய்தாலே கடவுள் நம்முடன் இருப்பார் என்பதை நம்புவன் நான். மனசாட்சிக்கு விரோதமாக எதையும் நான் செய்யவே மாட்டேன்'', என்று தெரிவித்துள்ளார்.
'கே.ஜி.எப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழாவில் யாஷ் பேசுகையில், ''என் வாழ்க்கையில் நான் எல்லா வகையிலும் நன்றி சொல்லக்கூடிய ஒரு நபர் என்றால் அது என் மனைவி மட்டுமே. என்னுடன் நண்பராக இருப்பதும், என்னுடன் இணைந்து பணிபுரிவதும் மிகவும் கடினம். ஏனெனில் நான் ஒரு வித்தியாசமான ஆசாமி. இதுதான் உண்மை. என்னுடன் பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.
தொழில் என்றாலும் சரி, உறவு என்றாலும் சரி நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கவேண்டும். அதை செய்தாலே கடவுள் நம்முடன் இருப்பார் என்பதை நம்புவன் நான். மனசாட்சிக்கு விரோதமாக எதையும் நான் செய்யவே மாட்டேன்'', என்று பேசியது கவனம் ஈர்த்தது.
நயன்தாரா பேசும்போது, ''படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது என்பதில்லை. எனக்கு 'செட்' ஆகாது என்பதால், அதிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பேன். இந்த விழாவுக்கு யாஷ் போன் செய்து அழைத்தார். அதனால் மறுக்க முடியாமல் வந்துவிட்டேன்'', என்றார்.