குடும்பத்தினரை விமர்சித்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் தனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பத்தினரை விமர்சித்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை
Published on: 

சென்னை,

என்னை பற்றி விமர்சிப்பதை ஒரு நடிகையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால், தனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்தினரைப் பற்றிய விமர்சனங்கள்

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் ராஷ்மிகா பங்கேற்றார். அப்போது இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. குறிப்பாக, விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொள்ளும்படி ஓராண்டு காலம் தினமும் கேட்டுக்கொண்டதாக ராஷ்மிகா தெரிவித்த கருத்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இருவரையும் குறிவைத்து போலியான தகவல்கள், திருத்தப்பட்ட புகைப்படங்கள், ஆள்மாறாட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் இணையத்தில் தொல்லைகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

'முழு போராளியாக மாறிவிடுவேன்'

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, இணையவழி விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது குறித்து ராஷ்மிகா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பகாலத்தில் எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்து வந்ததாகவும், பின்னர் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது நடிப்பு, திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட குணநலன்கள் குறித்து விமர்சிப்பதை ஒரு நடிகையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால், தனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது . எனது குடும்பத்தைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் என்னால் அமைதியாக இருக்க முடியாது. அப்போது நான் முழு போராளியாக மாறிவிடுவேன். எனது அடுத்த படமான 'மைசா' படத்தில் வருவதைப் போல ஆக்ரோஷமாகப் போராடுவேன்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

'மைசா' படத்தில் ராஷ்மிகா

இதற்கிடையே, ராஷ்மிகா நடிப்பில் உருவாகி வரும் அதிரடி திரைப்படம் 'மைசா'. ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான அதிரடி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

X