பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் நடிகை திரிஷா பேட்டி

பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை திரிஷா கூறினார்.
பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் நடிகை திரிஷா பேட்டி
Published on

ஐதராபாத்,

பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை திரிஷா கூறினார். இதுகுறித்து நடிகை திரிஷா அளித்த பேட்டி வருமாறு:

சினிமாவில் 10 ஆண்டுகளை தாண்டுவது கஷ்டம். ஆனால் நான் 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அழகி போட்டிகளில் வென்று இன்னொரு நடிகைக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

தற்போது 7 படங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் 3 படங்கள் பேய்கள் சம்பந்தமானது. மோகினி என்ற முழு நீள பேய் படத்தில் நடிக்கிறேன். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. காதல், அதிரடி படங்களை விட பேய் படங்களைத்தான் நான் விரும்பி பார்ப்பேன். ரசிகர்களை பயமுறுத்தும் பேய் படங்களில் நடிக்கவும் பிடிக்கும்.

பலர் பேயை பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தடவையாவது பேயை பார்த்து விட வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆண்டவன் இருப்பது உண்மையென்றால் பேய் கூட இருக்கலாம். மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.

பல கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது போன்ற கதைகள் வந்தால் நடிப்பேன். ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் ஒரே படத்தில் நடிப்பது புதிய அனுபவமாக இருக்கும். போட்டியும் இருக்கும். இந்தி பட உலகில்தான் இதுபோன்று பல நடிகர்நடிகைகள் சேர்ந்து நடிக்கும் வழக்கம் உள்ளது.

பெரிய கதாநாயகர்களும் சேர்ந்து நடிக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும்போது அந்த படத்தை இருவரது ரசிகர்களும் பார்ப்பார்கள். இது தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும். நான் பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் பார்த்து நடிக்க மாட்டேன். கதை நன்றாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிப்பேன். இவ்வாறு திரிஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com