

ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம்.கே.சாம்பசிவம் தயாரித்து சந்தோஷ் ராவணன் இயக்கி பிரஜின், இவானா வருண், ஆதிரன், அனுபமா குமார் நடித்துள்ள 'அந்தரன்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த பட விழாவில் நடிகர் பிரஜின் பேசும்போது, "எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. இந்த படம் உங்களுக்கு செட் ஆகவில்லை. சரியான கதைகளை தேர்வு செய்யுங்கள் என்று நிறைய பேர் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். ஒரு படம் தோல்வி அடைந்தால் ஹீரோ மீது பழிபோடுகிறார்கள். அதன்பிறகும் ஹீரோ தட்டுத்தடுமாறி எழுந்து மீண்டும் ஓடும் நிலைதான் இருக்கிறது. அப்படித்தான் 20 ஆண்டுகளாக பயணிக்கிறேன்.
ஆனாலும் ஏதாவது ஒரு படம் சாதகமாக அமைந்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் ஓடிக்கொண்டு இருக்கிறேன். என் மீதும் தவறு இருந்திருக்கலாம். முந்தைய படங்களை வைத்துதான் ஹீரோக்களை இங்கே மதிப்பிடுகிறார்கள்.
அந்த வகையில் பல முன்னணி நடிகர்களே வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். ஆனாலும் சூழ்நிலை மாறும். நல்ல கதைகள் இருக்கும்பட்சத்தில் ரசிகர்கள் ஏமாற்ற மாட்டார்கள். நிச்சயம் அங்கீகரிப்பார்கள்” என்று கூறினார்.