

நிஷாந்த் தோட்டி இயக்கத்தில் சிவகுமார் கசாரம், ஸ்வேதா லட்சுமண் நடித்துள்ள 'சஹா: லைப் ஆப் சஞ்சு' என்ற தெலுங்குப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஐதராபாத்தில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்வேதா லட்சுமண் பேசுகையில், "இந்தப் படம் தொடங்கிய சமயம் எங்களிடம் பெரிய நடிகர்களோ, பெரிய அளவிலான பட்ஜெட்டோ கிடையாது. ஆனாலும் நம்பிக்கையுடன் படத்தை எடுத்து முடித்துள்ளோம்.
நாம் எடுக்கும் ஒரே ஒரு முடிவு நம் ஒட்டு மொத்த வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடக்கூடும். இந்த உணர்வுகள் அனைத்தையும் எங்கள் படத்தில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளோம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அற்புதம் என்று ரசிகர்கள் பாராட்டுவார்கள்.
யாருக்காவது ஏமாற்றம் ஏற்பட்டாலோ, படம் ஓடாமல் போனாலோ நான் என் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன். இதைச் சவாலாகவே சொல்லிக் கொள்கிறேன். இந்தக் கதையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றார். நடிகையின் இந்தச் சவால் பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.