என்னால் முடிந்திருந்தால் எனது ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு தந்திருப்பேன் - சாந்தனு பாக்கியராஜ்

பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு, தனது தந்தை மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக உருக்கான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
என்னால் முடிந்திருந்தால் எனது ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு தந்திருப்பேன் - சாந்தனு பாக்கியராஜ்
Published on

என்னால் முடிந்திருந்தால் எனது ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு தந்திருப்பேன் என்று நடிகர் சாந்தனு பாக்கியராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் நேற்று முன்தினம் காலை மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 73. பாக்யராஜ் மறைவு செய்தி திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மறைந்த பாக்யராஜ் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இருப்பினும் பாக்யராஜ் மறைவு துக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

இதனிடையே, பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு, தனது தந்தை மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக உருக்கான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பாக்யராஜ் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோவிற்கு "முடிந்தால் மட்டும்..." என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

“என்னால் முடிந்தால் என் வாழ்க்கையின் பத்து ஆண்டுகளை எடுத்து என் அப்பாவுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன். அப்போதுதான், இன்னும் ஒரு பத்தாண்டுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ, அவர் ரசிகர்களுக்கு மேலும் பல திரைப்படங்களையும் கதைகளையும் வழங்க முடியும். ஒரு ரசிகனாகவும், கற்றுக்கொள்பவனாகவும் நான் அவற்றை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று அந்த வீடியோவில் சாந்தனு கூறியுள்ளார்.

நடிகர் சாந்தனு பகிர்ந்த வீடியோவிற்கு அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த கடினமான காலங்களில் மன உறுதியுடன் இருங்கள் எனக்கூறி சாந்தனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com