நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன் - நடிகை கீர்த்தி பாண்டியன்


உதய் கே இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அஃகேனம்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து, தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். உதய் கே இயக்கியுள்ள 'அஃகேனம்' படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது, "4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். அதற்கு முன் அவர் இயக்கிய 'யாக்கை திரி' எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம், அதன் தொழில்நுட்ப தரம் சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடிகராக இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.

அப்பா 'ஊமை விழிகள்', 'இணைந்த கைகள்' ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக உணர்ந்தேன். இப்படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடைபெறுகிறது. விபத்து - போர்- இழப்பு - என ஏராளமான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப் ஆக இருக்கிறது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில். எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கதாபாத்திரங்களுக்கு சில விஷயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . இப்படத்தில் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாக நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்'' என்றார்.

1 More update

Next Story