யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடி - நடிகை ரேவதி

யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடி - நடிகை ரேவதி

ஒவ்வொரு நாளும் இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தபட்சமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்.
Published on

80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன், மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார். இது தவிர்த்து ரேவதி மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார் ரேவதி.

அனுபவ் சின்ஹான இயக்கத்தில் டாப்ஸி பன், ரேவதி,கனி குஸ்ருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, ஜீஷன் அய்யூப் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'அஸ்ஸி'. மேலும், இப்படத்தில் நசிருதீன் ஷா, சுப்ரியா பதக் மற்றும் சீமா பார்கவா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில், ரேவதி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், “‘அஸ்ஸி’ என்பது தமிழில் 80 என்று அர்த்தம். ஒவ்வொரு நாளும் இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தபட்சமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், எப்ஐஆர் போடப்படாத வழக்குகள் பல இருக்கிறது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். அதை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தினுடைய கதையே பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பயணத்தை பற்றிதான்.

தவறான எண்ணத்தில் ஒருவர் தொட்டால் அதை தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்பதை தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். இதனால் தான் பல பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை வெளியில் சொல்ல பயந்து அதை மனதுக்குள் வைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு பெண்ணின் உடலை ஒருவன் தவறாக தொடுவதை, அந்த பெண்ணால் வாழ்க்கையில் மாறக்கவே முடியாத ரணமாகிவிடும். இதனால், இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், குழந்தைகளுக்கு துணையாக இருக்க வேண்டும். யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடி என்று சொல்லி கொடுக்க வேண்டும்.

நான் 11வது படித்துக்கொண்டு இருக்கும் போது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவனை அந்த இடத்திலேயே பளாரென அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள். அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா, யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக அடி என்றார்கள். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். நடிகை ரேவதியின் இந்த பேச்சுக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com