'நடிகை என்றால் இப்படி எல்லாம் நடக்கும்' - டீப்-பேக் விவகாரம் குறித்து ராஷ்மிகா விளக்கம்

ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
'நடிகை என்றால் இப்படி எல்லாம் நடக்கும்' - டீப்-பேக் விவகாரம் குறித்து ராஷ்மிகா விளக்கம்
Published on

சென்னை,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'டீப் பேக்' எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து ராஷ்மிகா மந்தனாவும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து 'டீப் பேக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பிரபலங்களின் போலி வீடியோக்கள் வெளியாகி வந்தன. இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஈமானி நவீன்(24) என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களை பெறுவதற்காக நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோவை வெளியிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் டீப் பேக் வீடியோ விவகாரத்தை இவ்வளவு கடுமையாக எடுத்தது ஏன் என்பது குறித்து ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், "இதுபோன்ற பல தொல்லைகளை நடிகைகள் எதிர்கொள்கிறார்கள். சிலர் நடிகை என்றால் இப்படியெல்லாம் நடக்கும் என்று பேசுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை நாம் வெளியே சொல்ல அஞ்சுகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக்கி விடும் நிலைமை இருக்கிறது.

நான் கல்லூரியில் படிக்கும்போது இதுபோல் நடந்து இருந்தால் அதனை வெளிப்படுத்த தைரியம் வந்து இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது நடிகை என்ற அடையாளம் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ள எனக்கு தைரியம் கொடுத்து இருக்கிறது. எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பிரச்சினையில் கடுமை காட்டினேன்'' என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com