கிட்டார் கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா

கிட்டார் கலைஞர் சதானந்தம் மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டார் கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா
Published on: 

சதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். நண்பர்கள் இறப்பிற்கு நேரில் செல்லாத காரணத்தை இளையராஜா வீடியோவில் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

50 ஆண்டுகளாக இசைப் பயணம்

மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவருமான ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் சதானந்தம். சதா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் திரையிசையில் முன்னணி கிட்டார் கலைஞராகத் திகழ்ந்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், ‘அன்னக்கிளி’ திரைப்படம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாகப் பல பாடல்களுக்கு கிட்டார் இசை வாசித்துள்ளார். இவரது இசைப் பங்களிப்பு பல புகழ்பெற்ற பாடல்களின் சிறப்பான இசை அமைப்பில் முக்கிய இடம் பெற்றது. ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பாடல்களில் இவரது கிட்டார் இசை ரசிகர்களைக் கவர்ந்தது.

திரைப்படப் பாடல்களுடன், பின்னணி இசையிலும் சதா மாஸ்டர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி, பல்வேறு இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

காலமானார்

இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கிட்டார் கலைஞர் சதானந்தம் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இசைக் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியீடு

சதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். நண்பர்கள் இறப்பிற்கு நேரில் செல்லாத காரணத்தையும் வீடியோவில் கூறியுள்ளார். அதில் “என்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த சதானந்தம் இன்று காலமான செய்தி எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவர் இசை கலைஞர் சுதர்சனத்தின் மகன்தான். நீண்ட காலமாக என்னுடன் பணியாற்றியவர். அவருடைய இறப்பிற்கு நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.நான் என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் இறப்பிற்கு செல்லாத காரணம், காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், என் உணர்வுடன் கலந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளாதது குறித்து இளையராஜா விளக்கம்

மறைந்த பிரபலங்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று பல விமர்சனங்கள் இளையராஜா மீது வந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இந்த வீடியோவில் இளையராஜா பேசி இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com