ஆஸ்கர் விருது கிடைக்கும்னா நாளாவது குழந்தை பெத்துக்க ரெடி - சுராஜ் வெஞ்சரமூடு


ஆஸ்கர் விருது கிடைக்கும்னா நாளாவது குழந்தை பெத்துக்க ரெடி - சுராஜ் வெஞ்சரமூடு
x
தினத்தந்தி 21 March 2025 8:34 PM IST (Updated: 21 March 2025 8:36 PM IST)
t-max-icont-min-icon

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும்நிலையில், முதலில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் விக்ரம், அருண்குமார், துஷாரா, சுராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், "எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். இந்த ஆடியோ விழாவில் தான் ஜி.வி. சாரை நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார். நானும் உங்கள் ரசிகன் தான். உங்களுடைய இசையில் வெளியான 'கோல்டன் ஸ்பேரோ...' பாடல் என்னுடைய பேவரைட். தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி. அவர் உண்மையான தங்கமான மனிதன். அவருடைய இயக்கத்தில் வெளியான 'சித்தா' படத்தை பார்த்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தில் பணியாற்றிய போது 'சித்தா' படத்தை விட வேற லெவலில் அவருடைய உழைப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவும் மாறிவிட்டேன். நான் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழை பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்த படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.

விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார் என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். விக்ரம் சார் ஐ லவ் யூ. நானும் உங்களின் ரசிகன் தான். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான 'நியூ 'படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் வெரைட்டியான கேரக்டரில் நடித்தார். பிறகு அவருடைய நடிப்பிற்கும் நான் ரசிகன் ஆகிவிட்டேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்திருப்பார். அதுவும் எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான 'இறைவி' படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு மூணு குழந்தைகள் இருக்கிறது. முதல் குழந்தை பிறந்த போது முதல் ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. இரண்டாவது குழந்தை பிறந்த போது இரண்டாவது ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. மூன்றாவது குழந்தை பிறந்த போது ஸ்டேட் அவார்டும் நேஷ்னல் அவார்டும் ஒரே வருடத்தில் கிடைத்தது. இனிமேல் ஆஸ்கர் அவார்ட் எனக்கு கிடைக்கும்னா நாளாவது குழந்தைக்கு நான் ரெடி" எனக் கலகலப்பாக பேசினார்.

1 More update

Next Story