‘ராமாயணா’ படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

நமித் மல்ஹோத்ராவுக்கு சொந்தமான ‘பிரைம் போகஸ்’நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
‘ராமாயணா’ படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
Published on: 

மும்பை,

வால்மீகி எழுதிய ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘ராமாயணா’ படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நமித் மல்ஹோத்ராவுக்கு சொந்தமான ‘பிரைம் போகஸ்’நிறுவன அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com