ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்திய குறும்படம்

நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள 'அனுஜா' என்ற இந்திய குறும்படம் துரதிஷ்டவசமாக ஆஸ்கர் விருதை தவறவிட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சஸில் இந்திய நேரப்படி, அதிகாலை 5.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில், லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் (LIVE ACTION SHORT FILM) இந்தியாவைச் சேர்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் இடம்பெற்றிருந்தது. ஆடம் ஜெ கிரேவ்ஸ் இயக்கியுள்ள இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினையை பற்றி பேசுகிறது. இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ளார்.
இந்த குறும்படத்திற்கு நிச்சயமாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. அந்த பிரிவுக்கான விருதை 'ஐ அம் நாட் எ ரோபோட்' என்ற படம் (I'M NOT A ROBOT) வென்றது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதை தவறவிட்ட 'அனுஜா' குறும்படம் வருகிற 5-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.






