

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் திறமை கொண்ட இவர், தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம், நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது எதிர்கொண்ட விமர்சனங்கள், இன்றைய கதாநாயகிகளின் அணுகுமுறை எனப் பல விஷயங்கள் குறித்து இனியா மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
"நான் நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்காக நிறைய எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். அந்தக் காட்சிகளில் நான் நடித்திருக்கவே கூடாது என்று பலரும் விமர்சித்தார்கள். குறிப்பாக, அந்தக் காட்சிகளைப் பார்த்த பள்ளிக் குழந்தைகள் என்னைத் தவறாகப் பார்த்ததாகவும் உணர்ந்தேன். ஆனால், நான் அந்தக் காட்சிகளை அப்படிப் பார்க்கவில்லை. என்னுடைய சமூகப் பின்னணியையும், இயக்குநருடனான கலந்துரையாடலையும், முழுமையான திரைக்கதையையும் புரிந்துகொண்ட பிறகுதான் அந்தக் காட்சிகளில் நடித்தேன்.
நான் நடித்த அனைத்துப் படங்களுக்கும் விருதுகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். ஒரு காட்சியை நாங்கள் எவ்வளவு அழகியலுடன் படமாக்குகிறோம், அதை எப்படித் திரையில் முன்வைக்கிறோம் என்பதில்தான் அதன் தனித்துவம் இருக்கிறது. இன்றைய கதாநாயகிகளில் பலருக்கு நடிப்பின் மீது போதிய அர்ப்பணிப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவர்களுக்குப் புகழும் பணமும் மட்டுமே முக்கியமாக இருக்கிறது.
சில படங்களில் நடித்து, பணம் சம்பாதித்து, புகழ்பெற்று நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். ஒரு திரைப்படத்திற்கும், கலைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது அவரவர் விருப்பத்தையும் பார்வையையும் பொறுத்தது" என்று தெரிவித்துள்ளார்.