'வீர தீர சூரன் 2' படத்தை வெளியிட இடைக்கால தடை


வீர தீர சூரன் 2 படத்தை வெளியிட இடைக்கால தடை
x
தினத்தந்தி 26 March 2025 8:30 PM IST (Updated: 27 March 2025 11:16 AM IST)
t-max-icont-min-icon

விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொதுவாகவே சினிமாவில் எந்த ஒரு படமும் முதல் பாகம் வெளியான பின்னர்தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இயக்குனர் அருண்குமாரை பொறுத்தவரை அவர் முதலில் 2-ம் பாகத்தை இயக்கி வெளியிடுகிறார். அருண்குமாரின் இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டுக்குரியது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வீர தீர சூரன் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இப்படத்திற்கு மும்பையை சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் பண முதலீடு செய்திருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் எழுதி கொடுத்துவிட்டாராம். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி இன்னும் படம் ஓ.டி.டி உரிமை விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள் படம் வெளியாக தயாராகிவிட்டது. ரிலீஸ் தேதி அறிவித்ததால் படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை.

இதனால் மும்பை சேர்ந்த B4U நிறுவனம் முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. அதாவது, படத்தை நாளை காலை 10.30 மணி வரை வெளியிடக் கூடாது என உத்தரவு.

1 More update

Next Story