சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ரிஷப் ஷெட்டி

என்எஃப்டிசி திரைப்பட விழாவில் 86 நாடுகளைச் சேர்ந்த 159 சர்வதேசத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ரிஷப் ஷெட்டி
Published on: 

கோவாவில் நடைபெற்ற 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான மதிப்புமிக்க வெள்ளி மயில் விருதை வென்றுள்ளார் ரிஷப் ஷெட்டி.

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் ரிஷப் ஷெட்டி. கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் அவரது நடிப்புத் திறமையும், தனித்துவமான கதை சொல்லும் அவரது இயக்கத் திறமையும் பாராட்டுக்குரியவை.

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா

கோவாவில் நடைபெற்ற 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மதிப்புமிக்க வெள்ளி மயில் விருதை வென்றுள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி.

நவம்பர் 28-ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெள்ளி மயில் விருதை ரிஷப் ஷெட்டிக்கு வழங்கினார்.

குறிப்பாக, ‘காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ திரைப்படத்தில் பெர்மே கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய உடல்மொழி, உணர்ச்சிகளின் வெளிப்பாடு, தீவிரமான நடிப்பு ஆகியவற்றை சர்வதேச நடுவர் குழு வெகுவாகப் பாராட்டியுள்ளது. அவரது நடிப்பு வெறும் நடிப்பாக இல்லாமல் ஒரு முழுமையான அனுபவமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற என்எஃப்டிசி திரைப்பட விழாவில் 86 நாடுகளைச் சேர்ந்த 159 சர்வதேசத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சிறந்த படங்கள் கலந்துகொண்டன.

ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் கலாச்சாரத்தையும் மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்ட 'காந்தாரா' திரைப்படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் கர்நாடக மண்ணின் நம்பிக்கைகள், பாரம்பரியம், வழிபாட்டு முறைகளை உலக ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. அதன் தொடர்ச்சியாக உருவான ‘காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1’, அந்தக் கதையின் பின்னணியை மேலும் விரிவுபடுத்தி இந்திய மண்ணின் தனித்துவத்தையும் பெருமையையும் உலக அரங்கிற்குக் கொண்டு சென்றுள்ளது.

மேலும், ரிஷப் ஷெட்டியின் நடிப்புக்கான வெள்ளி மயில் விருதுடன், ‘காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ திரைப்படத்திற்கும் சர்வதேச நடுவர் குழுவின் சிறப்புக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி, இசை மற்றும் தனித்துவமான கதை சொல்லலுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், ரிஷப் ஷெட்டிக்கும் படக்குழுவினருக்கும் மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே பெருமை சேர்த்துள்ளது.

ஐகானிக் கோல்ட் விருது விழாவில் பான்-இந்தியா திரைப்பட பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை ருக்மணி வசந்த் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X