நாகாலாந்தில் சர்வதேச ஸ்டுடியோ - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

படைப்பாற்றலுடன் பாரம்பரியம் சங்கமிக்கும் இடமாக ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ இருக்கும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
கோஹிமா,
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ என்ற பெயரில், சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நாகாலாந்து முதல்-மந்திரி நெய்பியு ரியோ மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். ஏ.ஆர்.ரகுமானால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த ஸ்டுடியோவில், அதிநவீன ஒலிப்பதிவு வசதிகள், கலைநிகழ்ச்சி அரங்கம் மற்றும் இசைப்பணிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “நாகாலாந்திற்கு நேர்மையான, தனித்துவமான, கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய அரிய இசை ஆன்மா உள்ளது. இந்த பாரம்பரியம், உலகத்தரம் வாய்ந்த படைப்பாற்றலுடன் சங்கமிக்கும் ஒரு இடமாக ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ இருக்கும்.
இது இப்பகுதியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒன்றிணைந்து, பரிசோதனைகள் செய்து, தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் எதிரொலிக்கும் இசையை உருவாக்க அனுமதிக்கும். இந்த கனவை நனவாக்கிய முதல்-மந்திரி நெய்பியு ரியோ, நாகாலாந்து அரசாங்கம் மற்றும் TAFMA ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நாகா சர்வதேச ஸ்டுடியோவை ப்ளூக்யூப் ஆர்கிடெக்ட்ஸ் மற்றும் ரியாஸ்தீன் ரியான் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். மேலும், இது டாஸ்க் போர்ஸ் பார் மியூசிக் & ஆர்ட்ஸ் (TAFMA) மற்றும் நாகாலாந்து முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IDAN) ஆகியோரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






