

‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் பவி டீச்சர் ரோலை ஏற்று நடித்தவர் பிரிகிடா. விஷால் நடித்த ‘அயோக்யா’ படத்தில் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து வர்மா, மாஸ்டர், வேலன், இரவின் நிழல், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை, மார்கன்,இட்லி கடை, ஹாட் ஸ்பாட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகை பிரிகிடா, நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளான நேற்று தனது காதலை நெகிழ்ச்சியான சமூக ஊடகப் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “என் ஸ்டார்மேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சினிமா எனக்கு கனவுகளை தந்தது. வாழ்க்கை எனக்கு உன்னை தந்தது. நாம் ஒருபோதும், ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் எப்போது என்று தெரியவில்லை. அந்த உணர்வே நமது வாழ்க்கையில் காதலாக மாரிவிட்டது. என்றென்றும் என்னுடையவனாக இருக்கும் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவர்களது காதலுக்கு வீட்டு சம்மதமும் கிடைத்துவிட்டதால் இந்த வருடத்துக்குள்ளேயே திருமணமும் செய்துகொள்ள உள்ளார்கள். ஆனந்த்தை பொறுத்தவரை மீசைய முறுக்கு, நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். திருமண தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இத்தனை ஆண்டுகாலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்துவரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூணாக நின்ற நீங்கள், எங்களது இந்தப் புதிய தொடக்கத்திற்கும் உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளனர்.