

சென்னை,
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆரம்பத்தில் பொங்கலுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை தொடர்பான சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ளது. இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்கிடையில், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 19ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால், அதற்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்யலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், டிஸ்ட்ரிக்ட் (District App) செயலில் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதல் கிடைக்காத நிலையில் டிஸ்ட்ரிக்ட் செயலியில், ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜூன் 30ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு இன்னும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில் டிஸ்ட்ரிக்ட் செயலியின் அறிவிப்பு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.