

சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அஜித்தின் மாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. படத்தில் அர்ஜுன் தாஸ் தனது வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் பாராட்டுகளை பெற்றார். மேலும் பிரபு, பிரசன்னா, திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
'குட் பேட் அக்லி' வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமாரின் 64-வது திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். தற்காலிகமாக 'ஏகே 64' என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அஜித்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
'ஏகே64' திரைப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நடிகை ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'ஏகே64' திரைப்படத்தில் நடிகை கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் நட்சத்திர பட்டியல் மேலும் வலுவடைந்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.