

திரிஷா படப்பிடிப்புக்காக தற்போது லண்டனில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரும் அஜித்தின் கார் பந்தயத்தை பார்க்க வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல் அமைச்சர் விஜய், இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி. இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது. அஜித்குமார் கலந்து கொள்ளும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளது அவரது இருவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னணி சினிமா நட்சத்திரங்கள் லண்டனில் முகாமிட்டு வருகின்றனர்.
அஜித்தின் கார் பந்தயத்தை காண நடிகை ராதிகா சரத்குமாரும் லண்டன் சென்றுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தை சந்தித்து பேசும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராதிகா கூறியதாவது: , ‘கார் பந்தயத்தின் மீது தீராத ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் கவனத்துடன் செயல்பட்டு சாதனையாளராகத் திகழும் அதே வேளையில், எப்போதும் போல அடக்கமாகவும் வசீகரமாகவும் இருக்கும் அஜித்தைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.’ என்று தெரிவித்துள்ளார்.
அஜித்தும் ராதிகாவும் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘பவித்ரா’ மற்றும் 1999-ம் ஆண்டில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ராதிகா தனது இன்ஸ்ட பக்கத்தில், திரிஷாவை சந்தித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். திரிஷா படப்பிடிப்புக்காக தற்போது லண்டனில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரும் அஜித்தின் கார் பந்தயத்தை பார்க்க வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.