சினிமாவை தாண்டி அரசியலில் காலடி வைக்கிறாரா விஜய் சேதுபதி?

தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ வைரலானது.
சினிமாவை தாண்டி அரசியலில் காலடி வைக்கிறாரா விஜய் சேதுபதி?
Published on

நடிகர் விஜய் சேதுபதி, தனது ‘அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி’ இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பி.பிரசாத் என்பவரை நியமித்துள்ளார்.

இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. குறும்படங்களில் நடித்து தனக்கான வாய்ப்புகளைச் உருவாக்கி தென்மேற்கு பருவக்காற்று மூலம் நாயகனாக அறிமுகமானவர், தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென்று ரசிகர்களையும் வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் மேடையில்... தலைமை குறித்த பேச்சு

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்த சில ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார்.

விர்ச்சுவல் வாரியர்ஸ் குற்றச்சாட்டு

இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். முக்கியமாக, தவெக கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்வில், தான் எந்தவொரு நபரையோ அமைப்பையோ குறிப்பிட்டு சொல்லவில்லை என விஜய் சேதுபதி விளக்கமளித்தார்.

நற்பணி இயக்கத்தின் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளர் நியமனம்

இந்த நிலையில், விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்திற்குப் பி. பிரசாத் என்பவரைப் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட அறிக்கையில், “சிறப்பான செயல்பாடு, அமைப்பின் மீதான ஈடுபாடு, நிர்வாகத் திறன் மற்றும் பங்களிப்பை கருத்தில் கொண்டு பி. பிரசாத்தை அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இன்றுமுதல் நியமனம் செய்கிறேன். மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்பு பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல் உறுப்பினர் சேர்க்கையை மேம்படுத்துதல் மற்றும் மன்றத்தின் அனைத்து அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல் ஆகிய பொறுப்புகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அமைப்பின் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் தலைமை நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, ஒற்றுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு, ரசிகர் மன்றத்தில் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மன்றத்தின் வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்ப்பிர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் அரசியல் ஆசை?

விஜய் சேதுபதியிடமிருந்து வந்த இந்த அறிக்கை சாதாரணமாக இருந்தாலும் பலரும் நடிகர் தனுஷைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் அரசியல் ஆசையில் இருக்கிறார் போல என விவாதித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு மக்கள் விஜய் சேதுபதி எப்போதும் எளிய மனிதர்களுடன் பழகக்கூடிய, மேடைகளில் எதார்த்தமாகப் பேசக்கூடிய ஒருவராகவே பார்க்கப்படுகிறார். இந்த ‘மக்கள் செல்வன்’ என்ற எளிய பிம்பம், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தொடக்க கால அரசியல் பிம்பத்தை நினைவூட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com