

மும்பை,
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதால் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
மராட்டியத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் 'விமல் ஏலக்காய்' என்ற பெயரிலான விளம்பரங்களில் நடித்தனர். ஆனால் இது உண்மையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களுக்கான மறைமுக விளம்பரம் என்று உணவு பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து, இந்த விளம்பரங்களில் நடித்ததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டும், அந்த விளம்பரங்களை உடனடியாக நிறுத்த கோரியும் நடிகர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் துக்காராம் முண்டே கூறியதாவது:- "நோட்டீசுக்கு பதில் அளிக்க 3 நடிகர்களும் கால அவகாசம் கேட்டிருந்தனர். தற்போது உதவி கமிஷனர் இந்த விசாரணையை முடித்து, அவர்கள் விதிமுறைகளை மீறியுள்ளதை உறுதி செய்துள்ளார். எனவே, அடுத்த வாரம் இந்த வழக்கு தகுதிவாய்ந்த அதிகாரியான இணை கமிஷனரிடம் இறுதி தீர்ப்பிற்கு முன்வைக்கப்படும். அப்போது இறுதி தீர்ப்பு மற்றும் அபராதம் உறுதி செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஐகோர்ட்டை அணுகியுள்ளார். அவர் கோர்ட்டுக்கு சென்றிருந்தாலும், உணவு பாதுகாப்புத்துறை தனது துறை ரீதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இணை கமிஷனர் முன்னிலையில் தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
உணவு பாதுகாப்புத்துறையின் இந்த தீர்ப்பானது கோர்ட்டு தீர்ப்பு போன்றது இல்லை. இந்த தீர்ப்பின் மூலம் நடிகர்களுக்கு சிறை தண்டனையோ அல்லது குற்றவியல் குற்றச்சாட்டுகளோ விதிக்கப்பட மாட்டாது. அதேநேரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைமுகமாக விளம்பரம் செய்ததற்காக இத்துறை சார்ந்த விதிகளின்படி பல லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.