

சென்னை,
கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க முடியாமல் போனது பெரும் வருத்தத்தை அளித்ததாக நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், கர்நாடக இசையின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘எம்எஸ்- எ லேகசி ஆன் ஸ்கிரீன்’ என்ற பெயரில் தயாராகவுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கத் தனக்கு ஏழு முறை வாய்ப்பு கிடைத்ததாக நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். ஆனால், இப்படத்தை உருவாக்குவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த வாய்ப்புகளை நிராகரித்ததாக அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகத் திட்டமிடப்பட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படம், நீதிமன்றத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரையில் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமளித்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா அவரது கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.