கமலை வைத்து “தேவர் மகன் 2” இயக்குவது என் வாழ்நாள் கனவு - இயக்குநர் முத்தையா


கமலை வைத்து “தேவர் மகன் 2” இயக்குவது என் வாழ்நாள் கனவு - இயக்குநர் முத்தையா
x
தினத்தந்தி 16 Aug 2025 7:28 PM IST (Updated: 16 Aug 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

கொம்பன் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்னை சந்தித்து ‘தேவர் மகன் 2’ நீங்கதான் எடுக்கணும் சொன்னார் என்று இயக்குநர் முத்தையா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இவர், கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், முத்தையா மீது சாதிய படங்களை இயக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனலில் தனது சினிமா அனுபவம் குறித்து முத்தையா மனம் திறந்து பேசியுள்ளார்.

“என் சினிமா வாழ்க்கையில் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர்தான் எனது மானசீக குருக்கள். கொம்பன் படத்தில் வரும் முத்தையா கதாப்பாத்திரம் முதலில் கமல் சாரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவரை பார்த்து கதை சொல்ல முயற்சித்தேன். அது நடக்கவில்லை. பிறகு ராஜ்கிரண் சார் வந்தார். என் வாழ்வில் நடந்த உண்மையை முத்தையாவாக கொம்பனில் உருவாக்கினேன்.

மேலும், கமல் சாரை 3 முறைதான் பார்த்திருக்கிறேன். அவர் அலுவலக காம்பவுண்டிற்குள் செல்ல தயக்கம். அவர் நம்ம தொட முடியாத உச்சம். கொம்பன் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சார் வந்து என்னை சந்தித்து ‘தேவர் மகன் 2’ நீங்கதான் எடுக்கணும் சொன்னார். நான் கொஞ்சம் தயங்கிக் கொண்டே சார் அது எப்படிப்பட்ட படம், ‘தேவர் மகன் 2’ நான் எடுத்தா நல்லா இருக்குமா என்று கேட்டேன். கமல் சாருக்கு ஓகே சொன்னால் நான் எடுக்க தயார் என்றும் கூறினேன். நீங்க கவலைப்பட வேண்டாம், எல்லாம் பாசிட்டிவாதான் இருக்கு. கமல் சார் லண்டன் போயிருக்கார். வந்ததும் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன் முரளி சார் சொன்னார். அதன் பிறகு இதுவரை கதை டிஸ்கஸனில் தான் இருக்கிறது. கமல் சார் இல்லாமல் தேவர் மகன் 2 இல்லை. சக்திவேலுக்கு ஒரு மகள் பிறந்து வளர்ந்தால் எப்படி இருக்கும் என்பது போல கதையை மாற்றலாம். கமல் சாரை வைத்து ‘தேவர் மகன் 2’ இயக்குவது என்பது என் வாழ்நாள் கனவு” என இயக்குநர் முத்தையா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story